பீமா கோரேகான் வழக்கு: சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு


பீமா கோரேகான் வழக்கு: சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு
x

Image Courtesy:PTI 

பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மருத்துவகாரணங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

புனே மாவட்டத்தில் உள்ள பீமா- கோரேகாவ் போர் நினைவு சின்னத்தில் 200-வது ஆண்டு வெற்றி விழா கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு முந்தைய நாளில் எல்கர் பரிஷத் மாநாட்டில் நடைபெற்ற ஆத்திரமூட்டும் பேச்சுகளே காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். மேலும் எல்கர் பரிஷத் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி, சமூக ஆர்வலலும்,கவிஞருமான வரவர ராவ் உள்பட பலரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில், வரவர ராவ் மருத்துவ காரணங்களுக்காக தனக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்க மும்பை கோர்ட்டு மறுத்து விட்டது. இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

இந்த நிலையில், பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மருத்துவ காரணங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், என்.ஐ.ஏ கோர்ட்டின் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியே செல்லக்கூடாது. தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. சாட்சிகளை சந்திக்க கூடாது. என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வரவர ராவ் தனது விருப்பப்படி மருத்துவ சிகிச்சை பெற உரிமையுடையவர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து என்.ஐ.ஏ விடம் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வரவர ராவிற்கு மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story