பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் - பாதுகாப்பு மீறல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என வருத்தம்


பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் - பாதுகாப்பு மீறல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என வருத்தம்
x

சண்டிகர் வந்த பிரதமருக்கு பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் சால்வை அணிவித்து, பொற்கோயிலின் பிரதியை பரிசாக வழங்கினார்.

சண்டிகர்,

சண்டிகரின் புறநகரில் உள்ள மொகாலியின் முல்லன்பூரில் 300 படுக்கைகள் கொண்ட ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சண்டிகர் வந்த பிரதமருக்கு சால்வை அணிவித்து, பொற்கோயிலின் பிரதியை பரிசாக வழங்கி பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் பாராட்டினார்.

அதன்பின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் பேசியதாவது, புற்றுநோய் மருத்துவமனை பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கிய பெரிய பரிசு.

பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய அரசாங்கங்களின் தோல்வியால், சில சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை மாநில அரசு முதலில் எதிர்கொண்டது. ஆனால் இப்போது விஷயங்கள் முற்றிலும் கட்டுக்குள் உள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி இங்கு வந்தபோது, ​​உங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டியிருந்தது என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. ஆனால் பஞ்சாப் இன்று உங்களை வரவேற்கிறது. நீங்கள் நாட்டின் பிரதமர், உங்களை வரவேற்பது எங்கள் பொறுப்பு.

மாநில அரசு தரப்பில் இருந்து உங்களை வரவேற்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் பஞ்சாப் வந்தீர்கள், பஞ்சாபிற்கு சில பரிசுகளை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

பஞ்சாபின் அமைதி, முன்னேற்றத்துக்கு விரோதமான சக்திகளைத் தடுக்க மத்திய துணை ராணுவப் படையின் ஆதரவுடன் பஞ்சாப் காவல்துறை கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, பஞ்சாபில் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் மோடி செல்லும் வழியில், பெரோஸ்பூரில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் சிக்கித் தவித்தன.

அதன்பிறகு பிரதமர் மோடி பேரணி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் திரும்பினார். பின்னர், சுப்ரீம் கோர்ட்டு பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story