நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்


நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
x
தினத்தந்தி 28 Jun 2024 5:23 AM GMT (Updated: 28 Jun 2024 6:44 AM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா,

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆவதை நீட் தேர்வு தடுப்பதாகக் கூறி பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இதனிடையே நீட் தேர்வு வினாத் தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்றது என இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யவேண்டும். தற்போதைய தேர்வு முறையை மாநில அரசு மீண்டும் நடத்த வேண்டும். நடந்து முடிந்த நீட் தேர்வு பெரும் ஊழலுக்கு வழிவகுத்தது.

வினாதாள் கசிவு, குறிப்பிட்ட நபர்கள் மற்றும் தேர்வுகளை நடத்தும் அதிகாரிகளால் லஞ்சம் வாங்குதல், குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக திறக்கப்பட்ட வலைதளங்கள், கருணை மதிப்பெண்கள் போன்ற குற்றச்சாட்டுகள். இத்தகைய நிகழ்வுகள் இந்த மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

மாநிலங்கள் சொந்தமாக நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்ட முந்தைய மாணவர் சேர்க்கை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தற்போதைய நீட் தேர்வு அமைப்பு ஊழலுக்கு வழிவகுத்துள்ளது, இது பணம் செலுத்தக்கூடிய பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது, அதே நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Next Story