அசாம் வெள்ளம்; நகாவன் மாவட்டத்தில் 3.31 லட்சம் பேர் பாதிப்பு


அசாம் வெள்ளம்; நகாவன் மாவட்டத்தில் 3.31 லட்சம் பேர் பாதிப்பு
x

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நகாவன் மாவட்டத்தில் 3.31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கவுகாத்தி,

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையையொட்டி நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

இந்நிலையில், அசாம் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காம்பூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 2.37 லட்சம் மக்களும், ரஹா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 80 ஆயிரம் மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நகாவன் மாவட்டத்தில் மட்டுமே 3 வட்டத்திற்கு உட்பட்ட மொத்தம் 184 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள சூழல் ஏற்பட்டு உள்ளது. அதனால் காம்பூர் பகுதியை இணைக்க கூடிய பல்வேறு சாலைகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால், மக்கள் பெரும் அவதி அடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, 104 நிவாரண முகாம்கள் மற்றும் வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அசாமின் நகாவன் மாவட்டத்தில் வெள்ளத்தின் பிடியில் சிக்கி மொத்தம் 3.31 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.


Next Story