போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் கைது


போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)

சித்ரதுர்கா பெஸ்காம் அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:

சித்ரதுர்கா பெஸ்காம் அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெஸ்காம் ஊழியர் நியமனம்

கர்நாடகத்தில் போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்கு சேர்வது மற்றும் பணம் வாங்கி கொண்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்தது. பலர் பணம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி அம்ருத் பால் உள்பட பலர் கைதாகினர். இந்த நிலையில் சித்ரதுர்கா பெஸ்காம் அலுவலகத்தில் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்த்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பெஸ்காம் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் சில ஊழியர்களை நியமனம் செய்து கொள்ள அங்குள்ள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி கொண்ட 8 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பெஸ்காம் அதிகாரிகள் ரவிக்குமார், பைஜான் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். பணியில் சேர்ந்தவர்களிடம் இருந்து இவர்கள் 2 பேரும் லஞ்சமும் பெற்றுள்ளனர்.

அதாவது இந்த 8 பேருக்கும் முறையான கல்வி தகுதி கிடையாது. போலி சான்றிதழ்களை தயார் செய்து பணியில் சேர்ந்துள்ளனர்.

8 பேர் கைது

இதுகுறித்து பெஸ்காம் தலைமை என்ஜினீயரான நாகராஜ் சித்ரதுர்கா கோட்டை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரவிகுமார், பைஜான் ஆகியோர் சேர்ந்து, பிரேம்குமார், வீரேஷ், ரவிக்கிரண், ஹரிஷ், சிவு, பிரசன்னா, கார்த்திக், ரஞ்சித் ஆகிய 8 பேரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் பெஸ்காம் அதிகாரிகள் ரவிக்குமார், பைஜான் மற்றும் போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்கு சேர்ந்த பிரேம்குமார், வீரேஷ், ரவிகிரண், ஹரிஷ், சிவா, பிரசன்னா ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கார்த்திக், ரஞ்சித் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைதான 8 பேர் மீதும் கோட்டை போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story