டிக்கெட் வைத்திருந்தும் விமானத்தில் அனுமதிக்க மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்


டிக்கெட் வைத்திருந்தும் விமானத்தில் அனுமதிக்க மறுப்பு - ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
x

உரிய டிக்கெட் வைத்திருந்தும் விமானத்தில் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உரிய டிக்கெட் வைத்திருந்தும் பயணிகளை வெவ்வேறு காரணங்களை கூறி விமானங்களில் ஏற்ற விமான நிறுவனங்கள் அனுமதி மறுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மேலும், இவ்வாறு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளையும் விமான நிறுவனங்கள் செய்யவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பெங்களூரு, ஐதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் பல்வேறு சோதனைகளை நடத்தியது. இந்த சோதனையில் உரிய டிக்கெட் வைத்திருந்தும் பல்வேறு காரணங்களை காட்டி பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அவ்வாறு அனுமதி மறுக்கப்படும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளையும் விமான நிறுவனங்கள் செய்வதில்லை என்பதும் சோதனையில் தெரியவந்தது.

விமான போக்குவரத்தின் புதிய விதிகளின் படி, விமான நிறுவனம் உரிய டிக்கெட் வைத்திருந்தபோதும் பயணியை விமானத்தில் அனுமதிக்கவில்லையென்றால் அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அந்த பயணிக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த வித இழப்பீடும் வழங்க தேவையில்லை. ஆனால், பயணிக்கு 24 மணி நேரத்திற்குள் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தால் விமான நிறுவனம் அந்த பயணிக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாற்று விமானத்தை 24 மணிநேரத்திற்கு மேல் ஏற்பாடு செய்தல் பயணிக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விதி முறை உள்ளது.

ஆனால், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் நடத்திய சோதனையில் இந்த விதியை பல்வேறு விமான நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தில் இந்த விதிகள் நடைமுறைபடுத்தப்படவே இல்லை என்பதும் சோதனையில் தெரியவந்தது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புகளும் ஏர் இந்தியாவில் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, உரிய டிக்கெட் வைத்திருந்தும் பயணிக்கு விமானத்தில் அனுமதிக்க மறுத்து, மாற்று ஏற்பாடுகளையும் வழங்காமல் விதிகளை பின்பற்றாத ஏர் இந்தியாவுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய டிக்கெட் வைத்திருந்தும் விமானத்தில் அனுமதிக்க மறுக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற தகவல் இல்லை என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும், விதிகளை விமான நிறுவனங்கள் இனியும் சரிவர கடைபிடிக்கவில்லை என்றால் மீண்டும் அபராதம் விதிக்கப்படும் என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story