பிரதமர் பேச்சு பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்க்க முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு


பிரதமர் பேச்சு பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்க்க முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு
x

PTI 

பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசரமாக ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் போபாலில் நடந்தது.

அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஆதரிக்கிறது.

ஆனால், ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள், பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள். மக்களை தவறாக வழிநடத்தவும், முஸ்லிம்களை தூண்டிவிடவும் பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.தங்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடையும் அரசியல் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டில் இவருக்கு ஒரு சட்டம், அவருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த வீட்டை ஒழுங்காக நடத்த முடியுமா? அதுபோல், இரண்டு வகையான சட்டங்கள் இருந்தால் நாட்டை எப்படி நடத்த முடியும்?

அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, பொது சிவில் சட்டம் அவசியம். எதிர்க்கட்சிகள் எங்களை குற்றம் சாட்டிக்கொண்டே 'முசல்மான் முசல்மான்' என்று உச்சரித்தன. ஆனால், அக்கட்சிகள் உண்மையிலேயே முஸ்லிம்களுக்காக உழைத்திருந்தால், முஸ்லிம் குடும்பங்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருக்காது.

'பஸ்மந்தா' முஸ்லிம்களை கூட ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள், சமமாக நடத்தவில்லை. தீண்டத்தகாதவர்களாக கருதுகிறார்கள். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஓட்டுவங்கி அரசியல் காரணமாக, நாடோடி சாதிகள் கண்டுகொள்ளப்படவில்லை.

அதுபோல், 'முத்தலாக்' முறையை ஆதரிப்பவர்கள், முஸ்லிம் மகள்களுக்கு பெரும் அநீதி இழைக்கிறார்கள். 'முத்தலாக்' முறை, எகிப்து நாட்டில் 80 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டது.

பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமின் அங்கமாக 'முத்தலாக்' இருந்தால், அந்த நாடுகளில் ஏன் தடை விதிக்கப்பட வேண்டும்? 'முத்தாலாக்' முறை, மகள்களுக்கு அநீதியாக அமைவதுடன் ஒட்டுமொத்த குடும்பமும் சீரழிகிறது. என கூறினார்.

பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசரமாக ஆலோசனை நடத்தியது. பொதுசிவில் சட்டம் தொடர்பான சட்ட அம்சங்களை அவர்கள் விவாதித்தனர். 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வக்கீல்கள், நிபுணர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு சட்ட ஆணையத்திடம் வரைவு முன்மொழிவை சமர்பிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் இது தொடர்பாக கூறியதாவது:-

அனைவருக்கும் அவர்களின் மதம் மற்றும் மரபு சட்டங்களை பின்பற்றுவதற்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் அரசியல் அமைப்பு வழங்குகிறது.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுசிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்கள் அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை. அரசியலமைப்புக்கு இது எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜாமியத் உலமா அமைப்பின் பிரதிநிதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் வலியுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த மவுலானாக்கள் கலீத் ரஷீத் பராங்கி மஹலி," பொது சிவில் சட்டத்தை அடிமுதல் நுனி வரை முழுவதுமாக ஏஐஎம்பிஎல்பி எதிர்க்கிறது. சட்ட ஆணையத்தின் முன்பு எங்களின் கருத்துக்களை தீவிரமாக முன்வைப்பதன் மூலம் அரசால் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தினை எதிர்ப்பதற்கான ஒரு உத்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதற்காக செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் எல்லா முஸ்லிம் அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் நேரத்துக்கு முன்பு பொது சிவில் சட்டம் குறித்து பேசுவதை அரசியல்வாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்போதும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இந்தப் பிரச்சினையைத் தொடங்கியுள்ளனர்.

பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கப்போவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அது பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள்,பார்சிகள் இன்னும்பிற சிறுபான்மையினரை பாதிக்கும். இந்தியாவில் ஒவ்வொரு 100 கிமீக்கும் மொழி மாறுபடுகிறது. இப்படியிருக்கையில் அனைத்து சமூகத்துக்கும் ஒரே மாதிரியான விதியை அமல்படுத்த முடியும். ஒவ்வொரு சமூகமும் வித்தியாசமான வழிபாட்டு முறை, சடங்குகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொருவரின் சொந்த நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைபிடிக்கும், வாழும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.


Next Story