அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: மேல்முறையீட்டு மனு விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம்சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து


அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: மேல்முறையீட்டு மனு விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம்சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 4 Jan 2023 10:15 PM GMT (Updated: 4 Jan 2023 10:15 PM GMT)

புதுடெல்லி, ஜன.5-

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது.

தடை விதியுங்கள்

இதன்படி மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியத்தையும், வழக்கு கடந்து வந்த பாதையையும் அறிய விரும்புகிறோம்' என்று தெரிவித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகளின் விவரங்களையும் எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுக்கள், சிவில் மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இருக்காது என கடந்த ஜூலை 6-ந் தேதி உத்தரவிட்டு இருந்தோமே?' என கேட்டனர்.

அதற்கு வக்கீல் சி.ஏ.சுந்தரம், 'சிவில் வழக்கு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்தான் அடுத்த நடவடிக்கைக்கு சென்றிருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல், 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டது. ஆனால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு விட்டாரா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு 'பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்' என தெரிவிக்கப்பட்டது.

5 ஆண்டு பதவிக்காலம்

இதனையடுத்து வைரமுத்து சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் வாதாடினார். அவர், 'ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக, போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை அதாவது 2026-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை உள்ளது.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு உள்ளன. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்' என குறிப்பிட்டார்.

பொதுக்குழு ஒப்புதல் அவசியம்

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம் குறுக்கிட்டு, 'ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது கட்சியின் செயற்குழுவில்தான், பொதுக்குழுவில் அல்ல. இதற்கு பொதுக்குழுவின் ஒப்புதல் அவசியம்' என தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள் 'உங்கள் தரப்பு வாதிடும்போது இந்த வாதத்தை தெரிவியுங்கள்' என குறிப்பிட்டனர்.

கட்சியில் இருந்து நீக்கம்

இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் தனது வாதத்தில், 'ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு எதிராக கூட்டப்பட்டது. 2021, டிசம்பர் 1-ந் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்து விட்டு, கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளனர்.

கட்சியில் 1½ கோடி பேர் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். 2021, டிசம்பர் 1-ந் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தது காலாவதியாகிவிட்டதென்றால், அனைத்து பதவிகளும் காலாவதியாகி விட்டன.

கட்சியில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு முன் விளக்கம் கேட்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான நிகழ்ச்சி நிரல் பொதுக்குழுவில் இல்லை' என வாதிட்டார்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக...

அப்போது குறுகிட்ட மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், 'தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்பட்டதால், பொதுக்குழு அவரை நீக்கியது என குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள், அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை என கருத்து தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள், 'ஜெனரல் பாடி, ஜெனரல் கவுன்சில்' என குறிப்பிட்டுள்ளதால் விளங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர்.

உடனே வக்கீல் ரஞ்சித் குமார், இவை தொடர்பான கட்சி விதிகளை தாக்கல் செய்கிறோம் என தெரிவித்தார்.

இந்த வாரத்துக்குள் நிறைவு

வாதிட எவ்வளவு நேரம் எடுத்து கொள்வீர்கள்? என நீதிபதிகள் கேட்டபோது, வைரமுத்து சார்பில் 45 நிமிடங்கள், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் 1 மணி நேரம், எடப்பாடி பழனிசாமி சார்பில் அரை மணி நேரம், அ.தி.மு.க. கட்சி சார்பில் அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என வக்கீல்கள் தெரிவித்தனர். தேவைப்பாட்டால் அடுத்தவாரம் தள்ளிவைத்தால் வாதிடுவோம் என மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், 'அடுத்த வாரம் வேறு வழக்குகளை விசாரிக்க வேண்டி உள்ளதால், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை இந்த வாரத்துக்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என தெரிவித்து விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என்றால் என்ன? நீதிபதிகள் கேள்வி

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான விசாரணையில் நீதிபதிகள், 'கழகம் என்றால் என்ன?' என கேட்டனர். அதற்கு 'கழகம் என்றால் கட்சி என்று பொருள்' என வக்கீல் சி.ஏ.சுந்தரம் விளக்கம் அளித்தார்.

வழக்கு விசாரணையின்போது இரு தரப்பு வக்கீல்களும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்ற பெயர்களை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என்று சுருக்கமாக குறிப்பிட்டு வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், 'ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கு வக்கீல்கள் உரிய விளக்கம் அளித்தனர்.


Next Story