88 ஆண்டுகள் இல்லாத மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்


88 ஆண்டுகள் இல்லாத மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்
x

தலைநகர் டெல்லியில் சூறாவளி காற்றுடன் ஒரே நாளில் 23 செ.மீ. கனமழை கொட்டித்தீர்த்தது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. சுட்டெரிக்கும் வெப்பத்துக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியதால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டனர். கோடை வெப்பம் எப்போது தணியும், மழை எப்போது பெய்யும் என்று டெல்லிவாசிகள் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து, வெப்பத்தை குறைத்திருந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் ஆங்காங்கே லேசாக பெய்து கொண்டிருந்தது.

பின்னர் திடீர் வேகம் எடுத்து மழை, 'கொட்டோ கொட்டு' என கொட்டி தீர்த்தது. இடை இடையே பலத்த சத்தத்துடன் இடியும், மின்னலும் ஏற்பட்டது. இதற்கிடையே சூறாவளி காற்றும் பலமாக வீசியது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததாலும், இடியின் சத்தத்தாலும் பலரும் விழித்துக் கொண்டனர். மழை பெய்யும் வேகத்தை பார்த்து பயத்துடன் அமர்ந்து விடியலை எதிர்நோக்கினர்.

விடிந்து பார்த்தால், கனமழை டெல்லியையே புரட்டிப்போட்டது போல ஆகிவிட்டது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒவ்வொன்றாக தெரிய வந்தது. அதில் முக்கியமானது டெல்லி விமான நிலையத்தின் 1-வது முனைய மேற்கூரை சரிந்து விழுந்ததுதான். இந்த மேற்கூரை சரிந்து விழுந்ததாக தீயணைப்பு வீரர்களுக்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சில வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது விமான நிலைய புறப்பாடு பகுதியில் பயணிகள், கார்களில் சென்று இறங்கும் இடம், மேற்கூரையால் தரையோடு மூடப்பட்டு கிடந்தது.

சுமார் 70 அடி உயரத்தில் இருந்து இந்த மேற்கூரை விழுந்ததில் அங்கிருந்த4 கார்கள், பொருட்களை கொண்டுசெல்லும் வண்டிகள் நசுங்கின. பயணிகள் சிலரும், அவர்களை வழியனுப்ப வந்த சிலரும் சிக்கி இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர். மேற்கூரை விழுந்ததில் டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 45) என்ற கார் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 1-வது முனையத்தில் இருந்து பிற்பகல் 2 மணி வரை இயங்கவேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும், 2 மணிக்கு பிறகு இயங்கும் விமானங்கள் 2-வது முனையம் மற்றும் 3-வது முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் கூறினார். அத்துடன் பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடு அல்லது முழு பணத்தை திரும்ப அளித்தல் போன்றவற்றை செய்யுமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 228 மி.மீ. அதாவது சுமார் 23 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை 3 மணி நேரத்தில் மட்டும் சுமார் 15 செ.மீ. மழை வெளுத்து வாங்கியுள்ளது.

இந்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளம் தேங்கி நின்று கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக புதுடெல்லி ரெயில் நிலையம் அருகே உள்ள மின்டோரோடு பாலம் பகுதியில் கார் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் தேங்கியது. இதைப்போல ஐ.என்.ஏ., மாளவியாநகர், ஹவுஸ்காஸ் போன்ற தாழ்வான பல இடங்கள், குளம்போல மாறின.

டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் மற்றும் டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி ஆகியோரின் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

காலையில் நாடாளுமன்றம் செல்ல வெளியே வந்த ராம்கோபால் யாதவை அவருடைய ஊழியர்கள் 'அலேக்காக' தூக்கி காருக்கு கொண்டு சென்றனர். இதைப்போல காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் தனது வீட்டை வெள்ளம் சூழ்ந்ததாக கூறினார்.

இந்த கனமழையால் டெல்லி மாநகரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்போல ரெயில் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மழையால் நிஜாமுதீன் மற்றும் சப்தர்ஜங் ரெயில் நிலையங்களில் தண்ணிர் தேங்கி நின்றது. இதனால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் தாமதமாக புறப்பட்டன. இதற்கிடையே டெல்லியில் மேலும் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Next Story