விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில், 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் குடோனில் பதுக்கல்


விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில், 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் குடோனில் பதுக்கல்
x

விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில் குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


பாட்னா,


பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை கடைப்பிடித்து வருகிறது. மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது.

இந்த நிலையில், பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது. எனினும், 200 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என்றும் தகவலை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

இவற்றில் சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்து உள்ளனர். சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த விஷ சாராய பலியானது தொடர்ந்து பீகாரின் பல பகுதிகளுக்கும் பரவியது. 25 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.

30 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்பட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை பற்றி விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டது.

அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது. போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டால் அதுபற்றிய தகவல்களை அளிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டது.

இந்த நிலையில், பாட்னா நகரில் இன்று காலை கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் சென்றுள்ளது. போலீசார் அதனை மறித்து, சோதனை செய்துள்ளனர்.

அதில், மதுபானம் அடங்கிய பாட்டில் ஒன்று இருந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், மோரிவான் கிராமத்தில் உள்ள குடோனில் இருந்து அது கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

இதுபற்றி பாட்னா நகர விக்ரம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் குடோனுக்கு சென்று அதிரடி சோதனையிட்டு உள்ளனர்.

இதில், குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் அளவுள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சோதனை பற்றி காவல் ஆய்வாளர் மகேஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாங்கள் குடோனை சோதனை செய்ததில் 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ராஜ்குமார் சர்மா என்பவர் பெயரில் குடோன் உள்ளது.

இதனை சுது யாதவ் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.


Next Story