விமானம் மோதி கொத்து கொத்தாக செத்து விழுந்த பிளமிங்கோ பறவைகள்...மும்பையில் அதிர்ச்சி


விமானம் மோதி கொத்து கொத்தாக செத்து விழுந்த பிளமிங்கோ பறவைகள்...மும்பையில் அதிர்ச்சி
x

மும்பையில் விமானம் மோதி 36 பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் காட்கோபரில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் எமிரேட்ஸ் விமானம் (இகே 508) நேற்று இரவு 9.18 மணிக்கு பறவைகள் மீது மோதி சேதமடைந்தது. எனினும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக மும்பை விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. விமானம் சேதமடைந்ததற்கு பிளமிங்கோ பறவைகள் விமானத்தை தாக்கியதுதான் காரணம் என்று விமானிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்ந்து, விமான அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடமான லட்சுமி நகருக்கு சென்று பார்த்ததில் அங்கு 36 பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் பல பிளமிங்கோக்கள் உயிரிழந்துள்ளனவா என்பதை கண்டறிய வனத்துறை அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சதுப்புநில பாதுகாப்பு பிரிவு துணை பாதுகாவலர் தீபக் காடே கூறுகையில், "விமானம் பறவைகள் மீது மோதியதை விமான நிலைய அதிகாரிகள் எங்களிடம் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் லட்சுமி நகருக்கு (கிழக்கு காட்கோபர் வடக்கு பகுதி) அருகில் நடந்துள்ளது." என்றார்.

இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரான டி.ஸ்டாலின் கூறுகையில், "பறவைகள் விமானத்தில் மோதிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக பறவைகள் இரவில் வானத்தில் பறப்பது மிகவும் அரிது. ஒருவேளை இந்த பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக யாராவது இந்த பறவைகளை துரத்தி இருக்கலாம், அதனால் இவை இரவில் வானத்தில் பறந்திருக்கலாம். முன்பெல்லாம் பறவைகளின் சரணாலயத்திற்கு அருகில் எந்த மின் பாதையும் கிடையாது. ஆனால் தற்பொழுது சரணாலயம் அருகில் மின் பாதைகள் போடப்பட்டிருப்பதால் இப்பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம்." என்றார்.

விமானம் மோதி ஏராளமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story