புதுவையில் அரசு போக்குவரத்துகழக 3 பஸ்கள் தீவைத்து எரிப்பு திருநங்கைகள் மீது சந்தேகம்?


புதுவையில் அரசு போக்குவரத்துகழக 3 பஸ்கள் தீவைத்து எரிப்பு திருநங்கைகள் மீது சந்தேகம்?
x
தினத்தந்தி 7 Nov 2017 11:24 AM IST (Updated: 7 Nov 2017 12:05 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசு போக்குவரத்துகழக 3 பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக திருநங்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை புதிய பஸ் நிலையத்தை ஒட்டி புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் பணிமனை உள்ளது.  இந்த பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்க இடம் இல்லாததால் மறை மலை அடிகள் சாலையில் உள்ள தமிழக அரசின் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் புதுவை அரசு பஸ்கள் நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்தது.

புதுவை பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு  வந்த 11 பஸ்கள்  இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதி புதுவை அரசு போக்குவரத்து பணிமனையின் கிளை அலுவலகமாகவும் செயல்பட்டு வந்தது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென அங்கு தனியாக நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்த 3 பஸ்களில் நடுவில் நின்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பணிமனை இரவு காவலர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ வேகமாக பரவியது.

இதையடுத்து புதுவை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி மானோகர் தலைமையில் 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 பஸ்களின் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் உள்ள பேட்டரியில்  மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து இருந்தால் பஸ்சின் முன் பகுதியில்தான் தீ பிடித்திருக்க வேண்டும்.

போலீசாரின் விசாரணையில் அங்கு பணியில் இருந்த இரவு காவலர்கள் அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ்சில் திருநங்கைகள் சிலர் இருந்ததாகவும், அவர்களை விரட்டியடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.  இதனால் திருநங்கைகள் பஸ்சுக்கு தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story