கர்நாடக வனப்பகுதிகளை கண்டுகளிக்க புதிய சுற்றுலா திட்டம் அறிமுகம்


கர்நாடக வனப்பகுதிகளை கண்டுகளிக்க புதிய சுற்றுலா திட்டம் அறிமுகம்
x
தினத்தந்தி 28 March 2017 4:45 AM IST (Updated: 28 March 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக வனப்பகுதிகளை இயற்கை காட்சிகளுடன் கண்டுகளிக்க ஏதுவாக ‘வன வருடம்–2017’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சுற்றுலாத்துறை வன விலங்குகள் மற்றும் காடுகள் பாதுகாப்புடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்த ‘வன வருடம்–2017’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. சுற்றுலாத்துறை மந்திரி பிரியங்க் கார்கே, சுற்றுலா துறையின் உயர் அதிகாரிகள், வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனச்சூழல் மேம்பாடு துறையினர் ஆகியோரின் கருத்துகளை வைத்து முதல்–மந்திரி சித்தராமையா இந்த வருடத்தை ‘வன வருடம்’ என்று அறிவித்துள்ளார்.

இதற்காக சுற்றுலா துறையின்கீழ் பல்வேறு வசதிகள் மற்றும் வன உறைவிடங்களும் அமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் பல திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

முதல்–மந்திரி சித்தராமையா குறிப்பிடும்போது, ‘‘இயற்கை செல்வங்களை பாதுகாப்பதோடு, நமது கலாசாரத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.

வனப்பகுதி தங்கும் விடுதிகள்

கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள், விந்திய மலையின் தெற்கு வனப்பகுதிகள் ஆகியவை பல்வேறு வன விலங்குகளுக்கான புகலிடமாகவும், சுற்றுலா பயணிகளின் மனம்கவரும் பகுதிகளாகவும் உள்ளன. இதனால் அந்த இடங்களில் தங்கி இயற்கையை கண்டுகளிக்க பல்வேறு தங்கும் விடுதிகள் சுற்றுலா துறையால் அமைக்கப்பட்டுள்ளன.

மலைகளில் ஏறி சாகச பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக மலையேற்றத்திற்கான புதிய தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மேற்கு கடற்கரைகளில் மனம்கவரும் பயணத்தை தொடரும் அதே தருணத்தில், நதிகள் மற்றும் அருவிகள் ஆகியவற்றின் அழகையும் ரசித்தபடி காடுகளில் இயற்கை சூழலில் தங்கி ஓய்வெடுக்க வசதியாக ‘ரிசார்ட்டுகள்’ அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கான வசதிகள்

மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு ஹம்பி உள்ளிட்ட பல இடங்களில் வாகன வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைசூருவில் ‘ஸ்கை டைவிங்’, மங்களூருவில் நீர்வழிப் பயணம், ஹம்பியில் மோட்டார் சைக்கிள் பயணம் என்று சுற்றுலா பயணிகளுக்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதுபற்றி சுற்றுலாத்துறை மந்திரி பிரியங்க் கார்கே கூறுகையில், ‘‘நமது சந்ததியினருக்கு முன்னோர்களின் மதிப்புமிக்க பண்பாட்டையும், நல்ல சூழலையும் பாதுகாப்பான முறையில் தருவது நமது கடமை’’ என்றார். இயற்கையோடு இணைந்த வாழ்வுக்கு நல்ல வாய்ப்பாக அரசின் இந்த சுற்றுலா திட்டங்கள் உள்ளதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story