இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் 22–ந் தேதி விசாரணை


இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் 22–ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 18 March 2017 12:30 AM GMT (Updated: 17 March 2017 10:44 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் 22–ந் தேதி விசாரணை நடத்துகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் 22–ந் தேதி விசாரணை நடத்துகிறது. இதற்காக நேரில் ஆஜராகுமாறு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

தமிழக முதல்– அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மோதல்

அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12–ந் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (சசிகலா அணி) சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் கமி‌ஷனிடம் கோரிக்கை

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை கடந்த புதன்கிழமை சந்தித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சசிகலா அணியினர் நேற்று முன்தினம் நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்கள் இப்போது எதிர்ப்பதாக கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மதுசூதனன் மனு

அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் கையெழுத்துடன் கூடிய ஒரு மனு தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை என்றும், ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டது அ.தி.மு.க. கட்சியின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறப்பட்டு உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

சசிகலாவுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்

இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு நேற்று ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மதுசூதனன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகலையும் அந்த நோட்டீசுடன் இணைத்து அனுப்பி வைத்து இருக்கிறது.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள புகார்கள் குறித்து விளக்கமான பிரமாண பத்திரத்தையும், தங்கள் தரப்பு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களையும் 20–ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) தாக்கல் செய்யுமாறு அவர்கள் இருவரையும் தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

அத்துடன் தேர்தல் கமி‌ஷனுக்கு தாக்கல் செய்யும் பிரமாண பத்திரம் மற்றும் ஆவணங்களின் நகல்களை மதுசூதனன் தரப்புக்கு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் நேரில் வழங்கவேண்டும் என்றும், அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யுமாறும் தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டு உள்ளது.

22–ந் தேதி நேரில் விசாரணை

ஆனால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் கமி‌ஷனிடம் சசிகலா தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 21–ந் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக சசிகலா தரப்பினரையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும் 22–ந் தேதி அழைத்து விசாரணை நடத்த தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்து உள்ளது.

இதற்காக நேரில் ஆஜராகுமாறு இருதரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு?

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 16–ந் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் வருகிற 23–ந் தேதியுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24–ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள 27–ந் தேதி கடைசி நாள் ஆகும். எனவே வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்காக காலஅவகாசம் முடிவடைந்ததும் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

எனவே அதற்கு முன்னதாகவே இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தெரிந்துவிடும். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் டி.டி.வி.தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

Next Story