மணிப்பூர் முதல்-மந்திரி இபோபி சிங்கை ராஜினாமா செய்ய கவர்னர் கேட்டுக் கொண்டார்


மணிப்பூர் முதல்-மந்திரி இபோபி சிங்கை ராஜினாமா செய்ய கவர்னர் கேட்டுக் கொண்டார்
x
தினத்தந்தி 13 March 2017 11:07 AM GMT (Updated: 13 March 2017 11:06 AM GMT)

மணிப்பூரில் இரண்டாவது இடம் பிடித்த பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு எழுந்து உள்ளது.

இம்பால், 

மணிப்பூரில் இரண்டாவது இடம் பிடித்த பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு எழுந்து உள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காத பா.ஜனதா 21 தொகுதிகளில் வென்று இரண்டாவது இடம் பிடித்து உள்ளது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 4 இடங்களும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன.

 ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். மணிப்பூரில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இங்கும் இழுபறி நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக இரண்டாவது இடம் பிடித்த பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது என தகவல்கள் வெளியாகியது. மணிப்பூரின் காங்கிரஸ் முதல்-மந்திரி இபோபி சிங் தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ளது என்பிபியின் (தேசிய மக்கள் கட்சி) ஆதரவு எனக்கு உள்ளது என்றார். ஆனால் இறுதியில் தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவிற்கு கிடைத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆட்சி தொடங்கும் வகையில் மணிப்பூர் மாநில கவர்னர் நஜ்மா கெப்துல்லா இப்போதைய முதல்-மந்திரி இபோபி சிங்கை பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டு உள்ளார். நேற்று மாலை காங்கிரஸ் முதல்-மந்திரி இபோபி சிங் மற்றும் பிற தலைவர்கள் கவர்னர் மாளிகை சென்று நஜ்மா கெப்துல்லாவை சந்தித்து பேசினர். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ராஜினாமா செய்ய இபோபி சிங்கிடம் நஜ்மா கெப்துல்லா கேட்டுக் கொண்டதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. சந்திப்பின் போது தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது என காங்கிரஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே பாரதீய ஜனதாவும் தங்களுக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என கூறிஉள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் மணிப்பூரில் நடந்து வருகிறது. தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் விவேக் ராய் இன்று பேசுகையில், எங்களுடைய கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பார்கள் என்றார். 

காங்கிரசை முதலில் அழைக்க வேண்டும்

பா.ஜனதா 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்று கூறும் நிலையில் இப்போது துணை முதல்-மந்திரியாக உள்ள கய்கான்காம் காங்கிரஸ் கட்சியே அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷியாம் குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது என பா.ஜனதாவின் கூற்றை கய்கான்காம் கூறிஉள்ளார். காங்கிரஸ் கட்சியில் எந்தஒரு பிளவும் கிடையாது, இது அடிப்படையற்றது, பா.ஜனதா குளறுபடியை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என கூறிஉள்ளார். பா.ஜனதா பணத்திற்கு எம்.எல்.ஏ.க்களை வாங்க நினைக்கிறது எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.

பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

கவர்னர் விளக்கம்

கவர்னர் நஜ்மா கெப்துல்லா விளக்கம் அளிக்கையில் பாரதீய ஜனதா தனக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என கூறியது திருப்தி அளிக்கிறது. ஆட்சி அமைக்க உரிமை கோரி முதல்-மந்திரி இபோபி சிங் கூறினார். அவர்கள் (காங்கிரஸ்) தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் செயலாளர் கையெழுத்தை காகிதத்தில் பெற்று வந்தார்கள். தேசிய மக்கள் கட்சியின் சார்பாக நீங்கள் கடிதம் கொண்டுவர முடியாது என அவர்களிடம் கூறினேன்.
ஏனென்றால் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பா.ஜனதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக எனக்கு கடிதம் கிடைத்தது. 

முதல்-மந்திரி இபோபி சிங்கை பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டேன், வேறு எதுவும் பேச வேண்டாம் என்றேன், என்றார். 

பாரதீய ஜனதா தலைவரிடம் இருந்து எனக்கு ஆவணம் கிடைத்து உள்ளது என்றும் கூறிஉள்ளார் நஜ்மா கெப்துல்லா.

Next Story