தான்சானியா நாட்டில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்து தவித்த சென்னை மாணவி


தான்சானியா நாட்டில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்து தவித்த சென்னை மாணவி
x
தினத்தந்தி 1 Feb 2017 10:15 PM GMT (Updated: 1 Feb 2017 8:20 PM GMT)

தான்சானியா நாட்டில் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிகொடுத்து சென்னை மாணவி தவித்தார். அவருக்கு இந்திய தூதரக அதிகாரியும் உதவ முன்வரவில்லை.

புதுடெல்லி,

தான்சானியா நாட்டில் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிகொடுத்து சென்னை மாணவி தவித்தார். அவருக்கு இந்திய தூதரக அதிகாரியும் உதவ முன்வரவில்லை.

சென்னை மாணவி

சென்னையை சேர்ந்தவர் சரண்யா கண்ணன். திருமணம் ஆனவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

சரண்யா கண்ணனுக்கு தான்சானியா நாட்டில் உள்ள ஹார்வர்டு வர்த்தக பல்கலைக்கழகத்தில் 3 மாத படிப்பு ஒன்றில் இடம் கிடைத்தது. அதில் சேருவதற்காக, இரண்டு வாரங்களுக்கு முன்பு, தான்சானியா நாட்டின் தார் எஸ் சலாம் நகருக்கு போய் சேர்ந்தார். அவருடன் 40 பேர் கொண்ட குழுவும் சென்று இருந்தது.

அங்குள்ள இந்திய தூதரகம் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கொள்ளையன், சரண்யா கண்ணனின் கைப்பையை பறித்து சென்றான். அதில், 2 செல்போன்கள், ரொக்க பணம், கிரெடிட் கார்டுகள், ஓட்டுனர் உரிமம் ஆகியவை மட்டுமின்றி பாஸ்போர்ட்டும் இருந்தது. கை, கால்களில் லேசான சிராய்ப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து சரண்யா கண்ணன், போலீசில் புகார் செய்தார்.

அமெரிக்கா திரும்பினார்

பின்னர், மாற்று பாஸ்போர்ட் கேட்டு, அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியை அணுகினார். ஆனால், பாஸ்போர்ட் கிடைக்க 3 வாரங்கள் ஆகும் என்றும், ரூ.2 கோடி கொடுத்தால் கூட எதுவும் செய்ய முடியாது என்றும் அதிகாரி கூறிவிட்டார்.

அதையடுத்து, ஸ்பெயின், தைவான், பிரான்சு ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றும் தனது நண்பர்களுக்கு சரண்யா செய்தி அனுப்பினார். அடுத்த 2 மணி நேரத்தில், தான்சானியா நாட்டு இந்திய துணை தூதர் ராபர்ட் ஷெட்கிங்டாங்கிடம் இருந்து சரண்யா கண்ணனுக்கு அழைப்பு வந்தது. அவருக்கு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை ராபர்ட் வழங்கினார். 3 நாட்களில் சரண்யாவுக்கு அமெரிக்க விசாவும் கிடைத்தது.

அதன் உதவியால், அமெரிக்காவுக்கு திரும்பினார். அங்கு புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். புதிய கிரெடிட் கார்டுகளும் வழங்கப்பட்டன.

சுஷ்மா சுவராஜிடம் புகார்

இதற்கிடையே, தான்சானியா நாட்டு இந்திய தூதரக அதிகாரி நடந்து கொண்ட விதம் குறித்து ‘டுவிட்டர்‘ மூலம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் சரண்யா கண்ணன் புகார் செய்தார்.

அதற்கு சுஷ்மா சுவராஜ் ‘டுவிட்டர்‘ மூலம் அளித்த பதிலில், அந்த குறிப்பிட்ட அதிகாரியின் பெயரை மட்டும் தனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

ஊட்டி மாணவர்

இதுபோல், ஜார்ஜியா நாட்டில் படிக்க சென்ற நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த ஒரு மாணவர், கடந்த 50 நாட்களாக ஜார்ஜியா நாட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனிக்க சென்ற அவருடைய தாயாரின் விசா காலாவதி ஆகிவிட்டது.

இதுபற்றி அம்மாணவரின் சகோதரி காயத்ரி விஜயகுமார், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ‘டுவிட்டர்’ மூலம் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்துள்ள சுஷ்மா சுவராஜ், தாயாரின் விசாவை நீட்டிக்க இந்திய தூதரகத்தை அறிவுறுத்தி இருப்பதாக கூறியுள்ளார். 

Next Story