சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கொள்ளேகால்:

சிறுமி பலாத்காரம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 21). இவரது பக்கத்து வீட்டில் 8 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த மகேஷ், அந்த சிறுமியை தனது வீட்டுக்கு டி.வி. பார்க்க வரும்படி கூறி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். ஆனாலும் இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள்.

20 ஆண்டு சிறை

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து எலந்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்போில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது சாம்ராஜ்நகர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, மகேஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.


Next Story