மேலும் ஒருவர் உயிரிழந்தார்


மேலும் ஒருவர் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 15 Nov 2021 11:55 AM GMT (Updated: 15 Nov 2021 11:55 AM GMT)

திருப்பூரில் சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

வீரபாண்டி
திருப்பூரில் சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை  சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சாய ஆலை
திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற பெயரில் சாய ஆலை உள்ளது. இந்த சாய ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை நேற்று முன்தினம் சுத்தம் செய்தபோது  தொழிலாளி வடிவேல், சாயப்பட்டறை மேலாளர் தினேஷ் பாண்டி ஆகியோர் விஷவாயு தாக்கி பலியானார்கள். 
அவர்களை காப்பாற்ற சென்ற திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்,  ராமகிருஷ்ணன், நாகராஜ் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். இவர்கள்   3 பேரையும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள்  3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  
மேலும் ஒருவர் பலி
 இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை  3 ஆக உயர்ந்தது. இதையடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராஜேந்திரன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இதைடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அதன்பின்னரே உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். மேலும் ஆஸ்பத்திரியில் நாகராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர்  புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் சாய ஆலையை நேற்றும் 2ம் நாளாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்த குடும்பத்த்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது  சாய ஆலையில் 2 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிக்கையை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.



Next Story