குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2021 4:50 PM GMT (Updated: 5 July 2021 4:50 PM GMT)

கோவை அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சரவணம்பட்டி

கோவை அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

குடிநீர் பற்றாக்குறை 

கோவை அருகே உள்ள எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதி உள்ளது. இங்குள்ள 9-வது வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக 10 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்து வந்ததாக தெரிகிறது.

குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

காலிக்குடங்களுடன் சாலைமறியல் 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென்று காலிக்குடங்களுடன் கொண்டையம்பாளையம் சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

பொதுமக்களிடம் உறுதி 

ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனித்தனியாக கேட்வால்வு, மீட்டர் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், இந்த பணி முடிவடைந்ததும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story