இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு


இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 4 July 2021 6:52 PM GMT (Updated: 4 July 2021 6:52 PM GMT)

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு

கோவை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கோவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. அங்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

அதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். 

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம், துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, டாஸ்மாக் மண்டல மேலாளர் சாதனை குறள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. அங்கு, வைரஸ் பரவலை தடுக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப் பட்டு உள்ளது. 

2 மீட்டர் இடைவெளியில் சுண்ணாம்பு கலவையால் வட்டங்கள் இடப்பட்டுள்ளன. அதில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நின்று தடுப்பு கட்டைகள் வழியாகச் சென்று மதுபாட்டில்களை வாங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி வழங்க ஒவ்வொரு கடைக்கும் பணியாளர்களுடன் தன்னார்வலர் ஒவ்வொரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதிகாரிகள் குழு

மதுக்கடைகளில் அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை  உறுதி செய்ய வருவாய் துறை அதிகாரிகளை கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அவர்கள், திடீர் சோதனை நடத்தி கண்காணிப் பார்கள். மதுக் கடைகளுக்கு அருகில் கூட்டம் சேரவும், பொதுவெளி யில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மது விற்பனை அதிகமாக இருக்கும் கடைகளில் 2 கவுன்ட்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையற்ற மது விற்பனை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

டோக்கன் முறை

இது குறித்து கோவை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் சாதனை குறள் கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறந்து இருக்கும். மேலும் அண்டை மாவட்டங்களிலும் இன்று மதுக்கடைகள் திறக்கப் படுகிறது. 

இதன் காரணமாக கோவையில் கூட்டம் கூட வாய்ப்பு இல்லை. ஒருவேளை கூட்டம் அதிகமானால் டோக்கன் வழங்கி மதுபாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story