அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மறியல்


அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 4 July 2021 5:57 PM GMT (Updated: 4 July 2021 5:57 PM GMT)

வால்பாறையில் கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை

வால்பாறையில் கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அரசு ஆஸ்பத்திரி 

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இங்கு தொற்று பரவல் வெகுவாக குறைந்து உள்ளது.

 இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிகிறது. அதுபோன்று சரியான நேரத்துக்கு உணவுகளும் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. 

உறவினா்கள் மறியல் 

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் நேற்று அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அதன் முன்பு  அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- 

சத்தான உணவு 

இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 80 வயது மூதாட்டி கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சையும் அளிக்காததுடன் உணவும் கொடுக்கவில்லை. இதுபோன்றுதான் அனைத்து நோயாளிகளுக்கும் செய்து வருகிறார்கள். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு தான் முக்கியம். அந்த உணவை கூட சரியாக கொடுக்கவில்லை என்றால் அவர்கள் எப்படி குணமாவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல சிகிச்சையும் சரியான நேரத்துக்கு உணவும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story