விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 15 Feb 2021 11:18 PM IST (Updated: 15 Feb 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனம் கடன் மோசடி செய்ததாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள சொர்ணாவூர் கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் மணி மகன் தங்கத்துரை (வயது 25). இவர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர் திடீரென தான் வைத்திருந்த பாட்டிலை திறந்து அதிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். 
அவரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி,  உடனே 108 ஆம்புலன்சில் ஏற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி நிறுவனம் மீது புகார்

கடந்த 2015-ம் ஆண்டு லாரி வாங்கி தொழில் செய்து வந்தேன். இதற்காக நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினேன். அந்நிறுவனத்தினர் லாரி வாங்கியதற்கான ஆர்.சி. புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்காமல் அவர்களே வைத்துள்ளனர். இதனிடையே வாங்கிய கடனுக்கு முதல் தவணையாக ரூ.42 ஆயிரம் நான் செலுத்தினேன். அதன் பின்னர் ஆர். சி. புத்தகம் வழங்க சொத்து ஆவணம் வேண்டும் என்று கூறி, எனது உறவினரின் சொத்து பத்திரத்தையும் வாங்கி வைத்துக்கொண்டனர். ஆனால் அதன் பிறகும் லாரியின் ஆர்.சி. புத்தகத்தை வழங்காமல் நிதி நிறுவனத்தினர் ஏமாற்றி வந்தனர்.

லாரியை வாங்கி சென்றுவிட்டனர்

 இந்நிலையில் நான் மாதந்தோறும் தவணை தொகையை தவறாமல் செலுத்தி வருகிற நிலையில் தவணை தொகை கட்டவில்லை எனக்கூறி லாரியை அந்நிறுவனத்தினர் வாங்கிச்சென்றனர். இதுதொடர்பாக நான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் அந்த நிதி நிறுவனத்தினர், எனது லாரியை ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் சொத்து பத்திரம், லாரியும் போனதால் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வந்ததாக அவர் கூறினார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story