நெல்லிக்குப்பம் பகுதியில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு அறுவடை பணி தீவிரம்


நெல்லிக்குப்பம் பகுதியில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 Jan 2020 10:00 PM GMT (Updated: 8 Jan 2020 12:39 AM GMT)

நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்லிக்குப்பம், 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்புதான். அப்படிப்பட்ட கரும்பின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். இத்தகைய பன்னீர் கரும்புகளை காவிரியின் கடைமடையான நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, சிதம்பரம் பகுதியிலும், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு பகுதியிலும் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் கரும்புக்கு சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏனெனில் இங்கு, பன்னீர் கரும்புகள் வண்டல் மண்ணில் விளைவதால், அதன் சுவை மற்ற கரும்புகளை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதாகும். எனவே நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு பகுதியில் விளையும் பன்னீர் கரும்புகள், வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால், நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை, சத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, சமட்டிக்குப்பம், கோசத்திரம், வேகாக்கொல்லை, புலியூர் காட்டுசாகை உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்புகளை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து பன்னீர் கரும்புகளை வாங்கி செல்கின்றனர். சில விவசாயிகள் தாங்களாகவே அறுவடை செய்து, அந்த கரும்புகளை கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பத்திரக்கோட்டையை சேர்ந்த விவசாயி தேவராசு கூறுகையில், நிலத்தடி நீரை நம்பி பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்திருந்தேன். வெளியூர் வியாபாரிகள் நேரில் வந்து, எனது கரும்பு தோட்டத்தை பார்வையிட்டனர். தற்போது 20 கரும்புகள் உள்ள ஒரு கட்டு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை பேசி இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டு களாக கரும்பு விலை ஏற்றம் காணாமல் அப்படியே தான் உள்ளது. ஆனால், உற்பத்தி செய்வதற்கான உரம், ஆட்களுக்கான கூலி மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் என்னை போன்ற விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் எங்களிடம் இருந்து கரும்புகளை வாங்கி செல்லும் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்துவிடுகிறார்கள். அதை விளைய செய்த நாங்கள் தான் ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதனால் தான் ஆண்டு தோறும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக அவர் கவலையுடன் தெரிவித்தார்.

Next Story