களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47 அடியாக உயர்வு


களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 21 Dec 2019 10:15 PM GMT (Updated: 21 Dec 2019 8:07 PM GMT)

களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் களக்காட்டில் உள்ள தாமரைகுளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மநேரி குளம், வடகரை குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.

இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அதேபோல் களக்காடு வடக்கு பச்சையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கீரைக்காரன் தொண்டு பகுதியிலும் மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

மேலும் தலையணையில் இருந்து ஊட்டு கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர் மட்டம் நேற்று 47 அடியாக உயர்ந்தது. இந்த அணையின் மொத்த உயரம் 50 அடியாகும். அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியே உள்ளது. இதனால் அணையானது, கடல் போல் காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story