நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த 82 மாடுகள் பிடிபட்டன


நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த 82 மாடுகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 8 Dec 2019 10:15 PM GMT (Updated: 8 Dec 2019 9:14 PM GMT)

நெல்லையில் சாலையில் சுற்றித் திரிந்த 82 மாடுகள் பிடிக்கப்பட்டன. அந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

நெல்லை, 

நெல்லையில் சாலையில் சுற்றித் திரிந்த 82 மாடுகள் பிடிக்கப்பட்டன. அந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்

நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி மாநகர காவல் துறை, மாநகராட்சி ஆகியன இணைந்து சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்தனர்.

அந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சில மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படியிருந்தும் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் அதிக அளவு மாடுகள் சுற்றி திரிகின்றன. வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

இந்த மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

82 மாடுகள் பிடிக்கப்பட்டன

இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை ஊழியர்கள் நேற்று பிடித்தனர். மேலப்பாளையம், பெருமாள்புரம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 82 மாடுகளை பிடித்தனர். பின்னர் அந்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி நெல்லையை அடுத்த அருகன்குளத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். சில மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story