மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 6 Dec 2019 10:00 PM GMT (Updated: 6 Dec 2019 8:37 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்து உள்ளது.

நெல்லை, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்து உள்ளது.

மலைப்பகுதியில் மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்யாமல் வெயில் அடித்தது. நேற்று காலையில் நெல்லை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் சாரல் மழை தூறியது. காலை 8 மணிக்கு பிறகு வெயில் அடித்தது. மதியம் 2 மணிக்கு மீண்டும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 3 மணிக்கு லேசான சாரல் மழை தூறியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 142.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,341 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 2,470 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

மணிமுத்தாறு அணை

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மாஞ்சோலை நாலுமுக்கு, மணிமுத்தாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,554 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.21 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 16.56 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 40 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 132.22 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் பாசனத்துக்காக அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரத்தில்) பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-10, சேர்வலாறு-11, மணிமுத்தாறு-8, நம்பியாறு-15, கொடுமுடியாறு- 10, ராதாபுரம்-19, அம்பை-6, சேரன்மாதேவி-5, நாங்குநேரி-8, பாளையங்கோட்டை-3, நெல்லை-2, தென்காசி-5, சங்கரன்கோவில்-2, கருப்பாநதி- 2, குண்டாறு-2, சிவகிரி-1.

சேறும், சகதியுமான சாலைகள்

தொடர் மழை காரணமாக நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் அருகிலும், சிந்துபூந்துறை கீழத்தெருவில் உள்ள சாலையிலும் சேறும் சகதியுமாக மக்கள் செல்லமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும். இல்லை எனில் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையம் முன்பு சேதம் அடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனத்தில் செல்கின்றவர்களுக்கு பள்ளம் தெரியாமல் பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

Next Story