தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது


தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 29 Nov 2019 10:00 PM GMT (Updated: 29 Nov 2019 5:29 PM GMT)

அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

நெல்லை, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 142 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,982 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அந்த தண்ணீர் மதகுகள் வழியாக அப்படியே திறந்து விடப்படுகிறது.

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.68 அடியாக உயர்ந்து உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த அணையின் நீர்மட்டம் 79 அடி இருந்தது. நேற்று ஒரே நாளில் 1.20 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,040 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 11.50 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 15.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 34 அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதியின் மொத்த கொள்ளளவு 85 அடியாகும். அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 84.50 அடியாக இருந்தது. இதனால் அணைக்கு வரும் 212 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 69.76 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 131.25 அடியாகவும் உள்ளது.

இந்த அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாதுகாப்பு கருதி அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீரை கரைபுரண்டு ஓடுகிறது. எனவே, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோவிலில் உள்ள உற்சவரை மேலகோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் ஆற்றில் உள்ள மண்டபங்களும், சுடலைமாடசாமி, கருப்பசாமி கோவில் பீடங்களையும் தண்ணீர் மூழ்கடித்தபடி செல்கிறது.

சீவலப்பேரி ஆற்றில் சிற்றாறு தண்ணீரும் கலப்பதால் அங்கு கூடுதலாக வெள்ளம் செல்கிறது. மருதூர் அணை நிரம்பி உள்ளதால், உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகின்றன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் விவரம் வருமாறு:-

தென்காசி-5, அம்பை -4, நாங்குநேரி-5, சேரன்மாதேவி -2, சங்கரன்கோவில் -2, சிவகிரி-1.

அணை பகுதிகளில் பாபநாசம் -21, சேர்வலாறு -24, மணிமுத்தாறு -6, ராமநதி -15, கடனாநதி-5, கருப்பாநதி -2.

Next Story