தென்காசியில் முதன்முதலாக நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்


தென்காசியில் முதன்முதலாக நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 25 Nov 2019 10:30 PM GMT (Updated: 25 Nov 2019 7:30 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் முதன்முதலாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டரிடம் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.

தென்காசி, 

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தில் முதன்முதலாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சுப்பராஜா மஹால் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள், அரசியல் அமைப்பினர் குவிந்தனர். மொத்தம் 1,200 மனுக்கள் பெறப்பட்டன.

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட ஆயிரப்பேரி அரசு விதைப்பண்ணை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உகந்தது அல்ல. எனவே, அலுவலகத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

முன்னாள் பஞ்சாயத்து தலைவி விஜயராணி கொடுத்த கோரிக்கை மனுவில், ‘ஆயிரப்பேரியில் தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

த.மு.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் த.மு.மு.க. மாநில செயலாளர் நயினார் முகமது, மாநில தொண்டரணி செயலாளர் கோக்கர் ஜான் ஜமால், மாவட்ட துணைச்செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், தென்காசி நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், மாநில துணை செயலாளர் துரை அரசு மற்றும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘தென்காசி பாறையடி தெரு, உடையார் தெரு, இலஞ்சி, மேல பட்டாகுறிச்சி ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடே‌‌ஷ் பாண்டியன் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், ‘தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியார், தேவேந்திர குலத்தான் என்ற ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கடையநல்லூர் தாலுகாவில் 4 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், ஒருவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், முதியவர் ஒருவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண நிதி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 உதவித்தொகையும், உழவர் பாதுகாப்பு திட்டம் திருமண உதவி தொகை ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

Next Story