மானூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.2.40 லட்சம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


மானூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.2.40 லட்சம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 17 Nov 2019 7:39 PM GMT)

மானூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மானூர், 

மானூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்

நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 49). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு, சாமுவேலும், கடை ஊழியர் முருகனும், வசூல் தொகை ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 590-ஐ ஒரு சாக்குப்பையில் வைத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சாமுவேல் ஓட்டினார்.

ரூ.2.40 லட்சம் பறிப்பு

டாஸ்மாக் கடையை கடந்து சிறிது தூரம் சென்றபோது, அந்த பகுதியில் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் தனது காலால் சாமுவேல் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் சாமுவேலும், முருகனும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். உடனே மர்மநபர்கள் 2 பேரும், பணத்தை சாக்குப்பையுடன் பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story