போலீஸ் வாகனம் மோதி காயமடைந்த மாணவி பரிதாப சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு


போலீஸ் வாகனம் மோதி காயமடைந்த மாணவி பரிதாப சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 6:39 PM GMT)

கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவியும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சன்புதூர், 

கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவியும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

போலீஸ் வாகனம் மோதியது

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக ராஜபாளையம் பட்டாலியனை சேர்ந்த போலீசார் ஒரு போலீஸ் வாகனத்தில் கடையநல்லூருக்கு வந்தனர். கடந்த 9-ந் தேதி அந்த வாகனம் கடையநல்லூரில் போலீசாரை இறக்கியபின், மீண்டும் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியில் சென்றபோது, வாகனம் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் உள்ள கொடிக்கம்பத்தில் மோதியது. அதன்பிறகும் நிற்காமல் ஓடி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

மாணவியும் சாவு

இதில் திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி மல்லிகா என்ற ஆயி‌ஷா பீவி (வயது 39) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடைய மகளும், 10-ம் வகுப்பு மாணவியுமான இர்பானா ஆசியா (15), அதே பகுதியை சேர்ந்த கன்சாள் மகரிபா பீவி (40) மற்றும் போலீஸ் வாகனத்தில் இருந்த போலீசார் முத்து, ராசுகுட்டி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கன்சாள் மகரிபா பீவி உயிரிழந்தார். இர்பானா ஆசியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இர்பானா ஆசியா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் சொந்த ஊரான திரிகூடபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story