புதிதாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள்


புதிதாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள்
x
தினத்தந்தி 13 Nov 2019 11:00 PM GMT (Updated: 13 Nov 2019 9:45 PM GMT)

புதிதாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடம்பெறும் பகுதிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கே.வி.குப்பம் புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டு உள்ளது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்தார்.

இதையடுத்து புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட தலைநகரங்கள் அமைய உள்ள இடங்களில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலங்களுக்கு இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வேலூரை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் மாவட்டம் எனவும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் எனவும், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், கே.வி.குப்பம் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக குடியாத்தம், வாணியம்பாடி, அரக்கோணம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் (புதிய வருவாய் கோட்டம்) ஆகிய வருவாய் கோட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய 4 தாலுகாக்கள் அடங்கும்.

இதே போல் புதிதாக அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அரக்கோணம் வருவாய் கோட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட 2 தாலுகாக்களில் உள்ள 145 வருவாய் கிராமங்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த 64 கிராமங்களும், நெமிலி தாலுகாவை சேர்ந்த 81 கிராமங்களும் அடங்கும். ராணிப்பேட்டை வருவாய் கோட்டம் மாற்றியமைக்கப்பட்ட 2 தாலுகாக்களை கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும். இதன்படி வாலாஜா தாலுகாவில் உள்ள 83 கிராமங்களும், ஆற்காடு தாலுகாவில் உள்ள 102 கிராமங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 5 தாலுகாக்கள், கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தாலுகா என 6 தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தாலுகாவில் கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் ஆகிய 2 பிர்க்காக்களில் உள்ள கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் கிழக்கு பிர்க்காவில் உள்ள 8 கிராமங்கள் பிரிக்கப்பட்டு அவை கே.வி.குப்பம் பிர்க்காவில் இணைக்கப்பட்டுள்ளன.

வேலூரை தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் கோட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி ஆகிய தாலுகாக்களும், குடியாத்தம் வருவாய் கோட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய தாலுகாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Next Story