ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலையில் தந்தை கைது பரபரப்பு தகவல்


ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலையில் தந்தை கைது பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2019 9:30 PM GMT (Updated: 13 Nov 2019 8:02 PM GMT)

ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ராதாபுரம், 

ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மாணவர் கொலை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்தவர் முத்து (வயது 45), ஆடு மேய்க்கும் தொழிலாளி. அவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுடைய மகன் வேல்முருகன் (19), மகள் சந்தனகுமாரி (17).

வேல்முருகன் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். முத்துவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மீனாட்சி தனது மகள் சந்தனகுமாரியை அழைத்துக் கொண்டு பணகுடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் முத்துவும், வேல்முருகனும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூட்டிய வீட்டில் வேல்முருகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

பஜாரில் தகராறு

வேல்முருகன் கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு முத்து மதுபோதையில் மகனுடன் சீலாத்திகுளம் மெயின் பஜாரில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது முத்து தகாத வார்த்தையில் பேசிக் கொண்டு வந்ததால், வேல்முருகன் தனது தந்தையை கண்டித்து தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை அக்கம்பக்கத்தினர் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் பஜாரில் வைத்து தனது மகன் தன்னை தாக்கியது அவருக்கு அவமானத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் வீட்டுக்கு சென்றதும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்து ஆடு விற்று வைத்திருந்த ரூ.8 ஆயிரத்தையும், கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்து வேல்முருகன் பறித்துக் கொண்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த முத்துவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவில் இருவரும் தூங்க சென்று விட்டனர். அதிகாலையில் எழுந்த முத்து, மகன் தன்னை தாக்கியதை நினைத்து ஆத்திரத்தில் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் வேல்முருகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் முத்து வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக முத்துவிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story