அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை


அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நடவடிக்கை - கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2019 10:45 PM GMT (Updated: 29 Oct 2019 7:30 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பது கண்டறியப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்- 0462-2329329, நகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்-0462-561998, பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்- 1800 4251426, கிராம ஊராட்சிகள்- 0462- 2501279, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை- 1077 என்ற தொலை எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் ஆழ்துளை கிணறுகளோ திறந்த வெளி கிணறுகளோ புதிதாக அமைக்கும் போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து விதிமுறைகளை பின்பற்றி அனுமதி பெற்றும், பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பணிகளை தொடர வேண்டும்.

புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்க மற்றும் பராமரிப்பு மேற்கொள்ள விண்ணப்பம் உரிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு படிவம் ஏ-யில் உரிய விண்ணப்ப கட்டணம் ரூ.100-க்கான வங்கி வரையோலையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி படிவம் பி-யில் 30 நாட்களுக்குள் உரிய அலுவலர்கள் உரிய அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இந்த அனுமதி தொடர்பாக படிவம் சி-யில் பதிவேடு பராமரிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் படிவம் டி-யில் மாதாந்திர அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் புதிய திறந்த வெளி கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தகாரர்கள் ரூ.1,500 கட்டணமாக செலுத்தி மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய ஒப்பந்தகாரர்கள் மட்டுமே ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். பதிவு செய்யாத ஒப்பந்தகாரர்கள் உள்ளாட்சி விதிகளை மீறி பணிகள் செய்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முறையாக அனுமதி பெற்று கிணறு வெட்டும் போதும், ஆழப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் போதும் கிணற்றின் உரிமையாளர்கள் கீழ்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.

பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்ய வேண்டும். கிணறு தோண்டும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்தில் கிணறு மூடி இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு சமதளமாக மூட வேண்டும்.

ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பின்னர் கிணற்றை சுற்றி உள்ள குழிகளை மூட வேண்டும். ஊரகப்பகுதியில் தனியார் நிலங்களில் உள்ள கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மழை சேகரிப்பாக மாற்றிட அரசு அறிவித்துள்ளது.

மேற்கண்ட அனைத்து நிபந்தனைகளையும் மீறி ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டு விட்டால், உள்ளாட்சி சட்டத்தின் படி கிணற்றின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் ஆழ்துளை கிணறு தோண்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அனைத்து பகுதியிலும் ஆழ்துளை கிணறு பணி நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விதிகளை மீறி கிணறு தோண்டப்பட்டால் அதை மூட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி ஆலங்குளம் அருகே உள்ள கடங்கானேரியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றை அதிகாரிகள் மூடினர்.

அதேபோல் ராதாபுரம் அருகே உள்ள அப்புவிளையில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் கிடந்தது. அதற்கு சிமெண்ட் மூலம் மூடி போடப்பட்டது. அதேபோல் அனைத்து கிராம பகுதிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆழ்துளை கிணறு மூடப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

செங்கோட்டை அருகே உள்ள தாட்கோ நகரில் 3 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாக செங்கோட்டை தாசில்தார் ஒசானா பெர்னாண்டோவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் ஒசானா பெர்னாண்டோ, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து 3 ஆழ்துளை கிணறுகளும் மூடப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story