புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது


புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2019 9:30 PM GMT (Updated: 25 Oct 2019 7:06 PM GMT)

புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடி, 

புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் தற்கொலை

நெல்லை மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி சண்முகத்தாய். இவர்களுடைய மகன் மாடசாமி (வயது 26). கூலி தொழிலாளி.

இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிபட்டியை சேர்ந்த சித்திரைக்கண்ணு மகள் முத்தரசி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மாணிக்கம், சண்முகத்தாய், மாடசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்தரசியிடம் உன் தந்தையிடம் குழந்தைக்கு தங்க சங்கிலி வாங்கிக் கொண்டு வா? என்று கூறி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்தரசி நேற்று முன்தினம் இரவு தனது அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. உடனே மாடசாமி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு முத்தரசி தூக்கில் பிணமாக தொங்கினார்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்தரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணிக்கம், சண்முகத்தாய், மாடசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மாடசாமிக்கும், முத்தரசிக்கும் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் பழனிக்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

முதியவர் சாவு

ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சுயம்புதுரை (60). கூலி தொழிலாளியான இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த சுயம்புதுரை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுயம்புதுரை நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சுரண்டை அருகே உள்ள ரெட்டைக்குளம் அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லதா (24). வெற்றிவேல் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த லதா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளித்து சாவு

சிவகிரி குமாரபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் சிற்பி வேலைகளை செய்யும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மனைவி ராமலட்சுமியிடம், வீட்டில் கொடுத்து வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை எங்கே? என கணக்கு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

பின்னர் அன்று இரவு ராமலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அவருடைய சத்தம் கேட்டு அங்கு வந்த குமார், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ராமலட்சுமியின் உடலில் பற்றி எரியும் தீயை அணைப்பதற்காக முயன்றார். ஆனால் அவருடைய உடலிலும் தீப்பற்றியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story