பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்


பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:30 PM GMT (Updated: 25 Oct 2019 6:39 PM GMT)

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமனம் செய்யாமல், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அரசாணை 345-ஐ மறு ஆய்வு செய்து காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் முத்துக்குமார், ஜான்சன், செல்வகுமார், அஸரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் சரவணகுமார், ஜஸ்டின், பாலசுப்பிரமணியன், சுதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்கள். போராட்டத்தில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

உள்நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. மற்ற வார்டுகளில் குறைந்த அளவே டாக்டர்கள் பணி செய்தனர். பணியில் இருந்த டாக்டர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை.

நோயாளிகள் அவதி

முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணிக்கு வரவில்லை. ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் அவதி அடைந்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியற்றும் டாக்டர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story