நெல்லை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
x
தினத்தந்தி 24 Oct 2019 9:30 PM GMT (Updated: 24 Oct 2019 8:15 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது.

சாரல் மழை பெய்தது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

பாபநாசம், கடனா அணை, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைப்பகுதியில் மழை பெய்தது. அதேபோல் அம்பை, செங்கோட்டை, சிவகிரி ஆகிய ஊர்களில் மழை பதிவாகி உள்ளது.

நெல்லையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல ஊர்களில் சாரல் மழை பெய்தது.

அணைகள் நீர்மட்டம்

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 112.15 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 112.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 607 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 354 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 124.80 அடியாக இருந்தது. நேற்று 125.33 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 48.15 அடியாக இருந்தது. நேற்று 48.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 152 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ) விவரம் வருமாறு:-

செங்கோட்டை- 5, சிவகிரி-1, பாபநாசம்-1, கடனா- 10, ராமநதி- 12, குண்டாறு- 8, அடவிநயினார்- 4, அம்பை- 0.60.

Next Story