தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு


தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற வேண்டும் கலெக்டர் ஷில்பா உத்தரவு
x
தினத்தந்தி 24 Oct 2019 10:00 PM GMT (Updated: 24 Oct 2019 8:11 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, 

தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை

தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நமது நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதிவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பாக அன்பளிப்பு அளிப்பதும் நமது கலசாரமாக விளங்கி வருகிறது.

உரிமம்

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பலகாரங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று இருக்க வேண்டும்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட் களை கொண்டு சுகாதார முறையில் தயார் செய்ய வேண்டும்.

கலப்பட பொருட்கள்

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பலகாரங்கள் தயாரிக்க ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், பயன்படுத்தக் கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதார சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயார் செய்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

புகார் செய்யலாம்

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மேலும் இது தொடர்பான புகார்களை நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். மேலும் 94440-42322 என்ற செல்போன் எண்ணிலும் புகார் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story