நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 11:00 PM GMT (Updated: 22 Oct 2019 7:08 PM GMT)

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக தொகுதி முழுவதும் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 688 வாக்குப்பதிவு எந்திரங்களும், 359 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 404 வி.வி. பேட் கருவிகளும் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டன. நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 66.35 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள், கட்சி ஏஜெண்டுகள் ஆகியோர் சரிபார்த்த பின்னர் ‘சீல்‘ வைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று காலை வரை கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த மையத்தை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தேர்தல் பொது பார்வையாளர் விஜயசுனிதா மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான நடேசன் ‘சீல்‘ வைத்தார்.

9 மணி முதல் முன்னணி நிலவரம்

வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கினாலும் முன்னணி நிலவரம் காலை 9 மணியில் இருந்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையை தலைமை செயலகத்தில் இருந்தவாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஷில்பா மற்றும் பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. கட்சி ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீறி கொண்டு சென்றால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினார்கள்.

3 அடுக்கு பாதுகாப்பு

மேலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துணை ராணுவ படையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் உள்வட்ட பகுதியில் போலீசார் சுற்றி வரும் வகையில் 2-வது அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3-வதாக கட்டிடத்தின் வெளியே இருந்து யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில், நுழைவு வாசல் மற்றும் கட்டிடத்தின் சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையில் 3 கேமராக்களும், அந்த அறையை சுற்றி 8 கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சியை நேரடியாக பார்க்கும் வகையில் வாக்கு எண்ணும் மையத்திலேயே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அகன்ற திரை டி.வி.க்கள் பொருத்தப்பட்டு கேமரா காட்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த அறையில் வேட்பாளரின் முகவர்களும் அமர்ந்து கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story