மக்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: “ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்


மக்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: “ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:30 PM GMT (Updated: 18 Oct 2019 9:39 PM GMT)

“மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விடாது“ என்று நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் கூறினார்.

நாங்குநேரி,

நாங்குநேரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். அவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் ஆகும். 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வசந்தகுமார், உயர் பதவிக்கு ஆசைப்பட்டு, வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை மறந்துவிட்டு சென்று விட்டார். இதனால் இந்த இடைத்தேர்தலுக்கு காரணமான கட்சி காங்கிரஸ். அதே கட்சி சார்பில் தற்போது ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். மக்களை மறந்த அந்த கட்சிக்கு நீங்கள் ஓட்டு போடலாமா? யாரை தேர்வு செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை சீர்தூக்கி பார்த்து ஓட்டு போட வேண்டும். ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ஆளும்கட்சி வேட்பாளர் எம்.எல்.ஏ.வானால் அவர் அமைச்சர்கள், முதல்-அமைச்சரை சந்தித்து உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்ற செய்வார். ஆனால், எதிர்க்கட்சியை சேர்ந்தவரை தேர்ந்தெடுத்தால் அவர் எங்களை அணுக மாட்டார். அதனால் எந்த நன்மையும் கிடைக்காது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், அவருடைய மகன் ஸ்டாலினும் போட்ட பொது வழக்கு தான் காரணம். இவர்கள் பொய் வழக்கு போட்டு, அவர் சிறை சென்றதால் தான் மனஉளைச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். ஆனால், இன்று மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இன்று நாம் தான் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதா மறைவுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். ஏனென்றால் அவர் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விட்டதா? ப.சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதா குறித்து கனிமொழி வசை பாடி வருகிறார். அவரும் திகார் சிறையில் அடைபட்டு கிடந்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது. ஸ்டாலின் விஷமத்தனமான பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடம் தவறான பிரசாரத்தை பரப்பி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கருணாநிதி 2 ஆண்டுகளாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. தகப்பனாருக்கே வஞ்சகம் விளைத்த ஸ்டாலின், ஜெயலலிதா மறைவு குறித்து பேசி வருகிறார்.

122 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் அவரது கனவு ஒருபோதும் பலிக்கவில்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது தி.மு.க.வினர் மேஜை மீது ஏறி நின்று நடனமாடினார்கள். ரவுடித்தனம் செய்யும் கட்சியான தி.மு.க. என்பதை சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டனர். இந்த ரவுடிகளை ஆட்சியில் அமர்த்தினால் இந்த நாடு தாங்குமா? பெரும்பான்மையை நிரூபித்த பிறகு வெளியில் வந்த ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். இவை அனைத்தும் அவரது சுயநலம், பதவி வெறி ஆகும்.

அ.தி.மு.க.வை உடைக்க பார்த்தனர். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தனர். ஆனால், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியவில்லை. அ.தி.மு.க.வில் ஒரு தொண்டனை கூட அவர்களால் வாங்க முடியாது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். நீங்கள் செய்த பாவம், அநியாயம் உங்களை பதவிக்கு வரவிடாது.

சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டதாக ஸ்டாலின் கூறி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். இது உண்மைக்கு புறம்பான தகவல். இந்தியாவில் சட்டம்-ஒழுங்கை பேணி பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான விருதையும் நான் பெற்று உள்ளேன். இதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோவையில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் சூலூர் பகுதியை சேர்ந்த 3 தி.மு.க.வினர் ஒரு கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். இதுதொடர்பாக அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். தி.மு.க. துணை செயலாளர் ஒருவர் அழகு நிலையத்துக்கு சென்று அங்கிருந்த பெண்ணை காலால் எட்டி உதைக்கும் காட்சியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இப்படி தி.மு.க.வினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சட்டம்-ஒழுங்கு பற்றி பேசுகிறார்கள்.

1989-ம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினர். அப்போது சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்தார். அவர் பேச எழுந்ததும், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதாவை தாக்கினார்கள். அவரது சேலையை பிடித்து இழுத்தனர். எனவே, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை.

தி.மு.க.வினர் ஆட்சிக்கு வராவிட்டால் திண்ணைக்கு வருவார்கள். மக்களிடம் மனுக்கள் வாங்குவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தால் மக்களை மறந்துவிட்டு தங்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். பழி வாங்கும் கட்சி தி.மு.க. மட்டுமே. அது கட்சியாக அல்ல, கார்ப்பரேட் கம்பெனியாக செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம்.

தாமிரபரணி-கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யாமல் பணியை தொடங்கி விட்டனர். நாங்கள் ஒவ்வொரு விவசாயியிடமும் பேசி நிலத்தை ஆர்ஜிதம் செய்து, 1 மற்றும் 2-வது கட்ட பணிகளில் தலா 95 சதவீதத்தை நிறைவு செய்து விட்டோம். 3 மற்றும் 4-வது கட்ட பணிகளும் வருகிற 2020-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடைந்து விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்.

ரெட்டியார்பட்டி நாராயணன் இந்த மண்ணின் மைந்தர். மக்கள் எளிதாக அணுகி தங்கள் கோரிக்கைகளை அவரிடம் தெரிவிக்கலாம். எனவே, அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பிரசாரத்தில், வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், அமைச்சர்கள் ராஜலட்சுமி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மனோஜ்பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, கே.ஆர்.பி.பிரபாகரன், முத்துக்கருப்பன் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர்களும், ஆவின் சேர்மன்களுமான சுதாபரமசிவன் (நெல்லை), என்.சின்னதுரை (தூத்துக்குடி), அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தின்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் பெண்கள் குடை பிடித்தபடி நின்று முதல்-அமைச்சர் பேச்சை கேட்டனர்.

Next Story