பாபநாசத்தில் பரிதாபம் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு


பாபநாசத்தில் பரிதாபம் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 10:09 PM GMT)

பாபநாசத்தில் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் தனது உறவினர் ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கடந்த 13-ந் தேதி உறவினர்களுடன் பாபநாசம் வந்தார். அப்போது சுரே‌‌ஷ் தான் மட்டும் தனியாக சென்று குளித்துவிட்டு வருவதாக உறவினர்களிடம் கூறிச் சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுரேசை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து உறவினர்கள், அங்குள்ள பெட்டிக்கடையில் விவரத்தை கூறி சுரேசின் புகைப்படத்தை கொடுத்து விட்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசிலும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.

பாபநாசம் தலையணையில் குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை பாபநாசம் தலையணை அருகே வாலிபர் ஒருவர் தண்ணீரில் பிணமாக மிதப்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, பிணமாக மிதந்தவர் சுரே‌‌ஷ் என்பது தெரியவந்தது. குளித்தபோது அவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.

பின்னர் இதுபற்றி அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சுரேசின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேசுக்கு இசையரசி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாபநாசம் தலையணை அருகே தண்ணீரில் மூழ்கி தொழிலாளி இறந்த சம்பவம் தேவிப்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story