டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டுபிடிப்பு தனியார் பீடி கம்பெனிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டுபிடிப்பு தனியார் பீடி கம்பெனிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 10:08 PM GMT)

நெல்லையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டுபிடிக்கப்பட்ட தனியார் பீடிக்கம்பெனிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘லார்வா’ எனப்படும் கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில், நெல்லை மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நெல்லை மாநகராட்சியில் 4 மண்டல பகுதிகளிலும் 31 ஆயிரம் குடியிருப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 25 வீடுகளில் கொசுப்புழு கண்டறியப்பட்டு, அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் குடியிருப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் ஆய்வின் போது கடந்த வாரம் தனியார் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டறியப்பட்டது. அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் கொசுப்புழு கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை குடியிருப்பு பகுதியில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு குடியிருப்புதாரருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் உள்ள ஒரு தனியார் பீடி கம்பெனியில் கொசுப்புழு கண்டறியப்பட்டு, அந்த கம்பெனிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அங்கு தண்ணீர் தேங்காமல் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு முட்டையிட்டு புழுக்களை உற்பத்தி செய்ய முடியாத வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் வைத்து, நோயை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story