கடையம் அருகே லாரி மோதியதில் பழங்கால மண்டபம் இடிந்து பெண் பலி; 4 பேர் படுகாயம்


கடையம் அருகே லாரி மோதியதில் பழங்கால மண்டபம் இடிந்து பெண் பலி; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:15 PM GMT (Updated: 2 Oct 2019 9:41 PM GMT)

கடையம் அருகே லாரி மோதியதில் பழங்கால மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடையம், 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கோவிலூற்று கிராமத்தின் மத்தியில் கல் தூண்களை கொண்ட பழங்கால மண்டபம் இருந்தது. இந்த மண்டபம் பழமையான ஓடு கட்டிடம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று மதியம் மதுரையில் இருந்து உரம் லோடு ஏற்றி வந்த லாரி, வள்ளியம்மாள்புரத்தில் லோடு இறக்கி விட்டு வடமலைபட்டி வழியாக கோவிலூற்றுக்கு சென்றது. லாரியை மதுரையை சேர்ந்த முருகன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அங்குள்ள மண்டபம் அருகே லாரி ஒரு வளைவில் திரும்ப முடியவில்லை.

இதனால் லாரியை டிரைவர் பின்னோக்கி எடுத்து வந்துள்ளார். அப்போது லாரி, மண்டபத்தின் கல் தூணில் மோதியது. இதில் மண்டபம் இடிந்து தரைமட்டமானது.

அப்போது மண்டபத்தின் உள்ளே அமர்ந்திருந்த அதே பகுதியை சேர்ந்த செல்லப்பா மனைவி தாமரைவள்ளி (67), ரத்தின சபாபதி மனைவி சீதாலட்சுமி (42), வேல்சாமி மனைவி குத்தாலவடிவு (75), ஜெயபிரகாஷ் மனைவி மகேஸ்வரி (42), அவரது மகள் மனிஷா (11) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகள் இடையே சிக்கியவர்களை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் தாமரைவள்ளி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

சீதாலட்சுமி, மகேஸ்வரி , மனிஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும், குத்தாலவடிவு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஊர் பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களும் இல்லை. மருந்துகளும் இல்லை. இதனால் தான் தாமரைவள்ளியை காப்பாற்ற முடியவில்லை என கூறி ஏராளமான பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, கடையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், ஆலங்குளம் தாசில்தார் கந்தப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாமரைவள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர்.

லாரி மோதி பழங்கால மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story