செங்கோட்டையில் காந்திய ரதயாத்திரை தொடக்கம்


செங்கோட்டையில் காந்திய ரதயாத்திரை தொடக்கம்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:35 PM GMT (Updated: 26 Sep 2019 10:35 PM GMT)

செங்கோட்டை மேலபஜார் வாகை திடலில் அமைந்துள்ள காந்திசிலை முன்பு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரதயாத்திரை தொடக்க விழா நடந்தது.

செங்கோட்டை,

செங்கோட்டை மேலபஜார் வாகை திடலில் அமைந்துள்ள காந்திசிலை முன்பு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரதயாத்திரை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய காந்திய இயக்க தலைவர் வி.விவேகானந்தன் தலைமை தாங்கி, ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். முன்னதாக காந்தியின் வரலாறு குறித்தும், மதுவின் தீமைகள் குறித்தும் வி.விவேகானந்தன், ராம்மோகன், டாக்டர் அப்துல்அஜீஸ், திருமாறன், விஜயலட்சுமி, மாரியப்பன் ஆகியோர் பேசினர். அதனை தொடர்ந்து ரதயாத்திரையில் கலந்துகொள்பவர்களுக்கு செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் நற்சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் பூரண மதுவிலக்கு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மதுரை காந்தி மியூசிய நிர்வாகி டாக்டர் பாதமுத்து, சமூக ஆர்வலர் வெங்கடாம்பட்டி திருமாறன், ஜெயந்திரா பள்ளி தாளாளர் ராம்மோகன், முதல்வர் ராணி ராம்மோகன், சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் விஜயலட்சுமி, ஓய்வுபெற்ற தாசில்தார் முத்துசாமி, அரசு மருத்துவமனை மருத்துவர் ரத்னபெத் முருகன், டாக்டர் ரெங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ரதயாத்திரை இலஞ்சி, குற்றாலம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, சேத்தூர் வழியாக ராஜபாளையம் சென்றடைகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், விருதுநகர் வழியாக அருப்புக்கோட்டை சென்றடைகிறது. நாளை (சனிக்கிழமை) சாத்தூர், கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில் சென்றடைகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், வெங்கடாம்பட்டி, கடையம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் வழியாக அம்பாசமுத்திரம் சென்றடைகிறது.

30-ந் தேதி முக்கூடல், நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. 1-ந் தேதி வள்ளியூர் வழியாக நெல்லைக்கு சென்று நிறைவடைகிறது. காந்திய கொள்கைகளை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் வலியுறுத்தும் வகையில் இந்த ரதயாத்திரை பிரசாரம் நடைபெறுகிறது.

வாசுதேவநல்லூரில் நடந்த ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ்.தங்கப்பழம் நிறுவனங்களின் தலைவர் எஸ்.தங்கப்பழம், எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசன், பள்ளி முதல்வர் டெய்சிராணி, மகாத்மா காந்தி சேவா சங்க தலைவர் தவமணி, துணை தலைவர் முகைதீனியா, பாரத மாதா சமூக சேவை அறக்கட்டளை இயக்குனர் இருதய இங்கியாசிக்கனி, கோவை ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story