நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் யாரும் வரவில்லை


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது - முதல் நாளில் யாரும் வரவில்லை
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 11:21 PM GMT)

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மனுதாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுமத்துல்லா ஆகியோரின் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தாலுகா அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்திலேயே போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்திய பிறகுதான் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுக்கள் கொடுப்பதற்கு என்று தனியாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்காக 12 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.

முதல் நாளான நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கியதையொட்டி தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வேட்புமனு தாக்கலுக்கு வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஷில்பா, நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பணமோ, பரிசுப்பொருட்களோ சிக்கவில்லை. இந்த தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடுவது குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மறுகால்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மஞ்சங்குளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story