“நெல்லையில் 2-வது நாளாக பலத்த மழை” தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது


“நெல்லையில் 2-வது நாளாக பலத்த மழை” தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 23 Sep 2019 10:45 PM GMT (Updated: 23 Sep 2019 11:21 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக நெல்லையில் 46 மி.மீட்டர் பதிவானது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால் அணைகளுக்கு தண்ணீரின் அளவு அதிகரித்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. தென்காசி, திசையன்விளை, நாங்குநேரி, ஆலங்குளம், பாவூச்சத்திரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. பல ஊர்களில் சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 16 மி.மீட்டர் மழை பதிவானது.

நெல்லையை பொறுத்த வரையில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. மாலை 4 மணி அளவில் கரு மேகங்கள் திரண்டு வந்தன. பின்னர் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் மழை நீடித்தது.

நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம் பகுதியில் மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கின. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் தண்ணீர் சூழந்தது. சந்திப்பு பஸ் நிலையத்தில் பயணிகள் குடை பிடித்து நின்றனர். சில மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பஸ்சை பிடித்து வீட்டுக்கு சென்றனர். மழையால் நெல்லை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இரவு வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அதிகபட்டமாக நெல்லையில் 46 மி.மீட்டர் மழையும், பாளையங்கோட்டையில் 20.40 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

மழையின் காரணமாக ஆங்காங்கே மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

Next Story