நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேச்சு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 8:30 PM GMT)

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்தார்.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் நெல்லை மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை நேர்மையாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு அரசு அலுவலர்களுக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். cv-i-g-il என்ற இணையதள செயலி மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். தேர்தல் பிரசார வாகன அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறுவதற்கு suvi-d-ha என்ற செயலி மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் இது தொடர்பான அனுமதி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். தேர்தல் பிரசாரத்துக்கு வாகன அனுமதி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் பிரசார காலம் முடிந்த உடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கட்சி, அரசின் சாதனைகள் தொடர்பாக எந்த ஒரு விளம்பரமும் அரசு செலவில் செய்யக்கூடாது. வாக்குச்சாவடி, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் அமைச்சர்கள் நுழைய அனுமதி கிடையாது. தேர்தல் பிரசாரத்தின் போது அலுவலக பணி எதையும் சேர்க்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குதலோ அல்லது பணம் வழங்குவதாக உறுதிமொழி அளிக்கவோ கூடாது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் விதமாக பிரசாரம் செய்யக்கூடாது. பிற கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக விமர்சனம் செய்யக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வழிபாட்டு இடங்களையும் தேர்தல் பிரசாரத்துக்கான இடமாக பயன்படுத்தக்கூடாது.

வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தல், மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல் செய்யக்கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்க கூடாது. தனிநபர் நிலம், கட்டிடம், சுவரில் கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பர தட்டிகள் தொங்க விடுதல், சுவரொட்டி ஒட்டுதல், சுவர் விளம்பரம் போன்றவைகள் உரிமையாளரின் அனுமதியின்றி செய்யக்கூடாது. தேர்தல் பிரசார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். பொதுக்கூட்டம், பிரசாரத்தின் போது ஒலிபெருக்கி பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும். இரவு 10 மணிக்கு பிறகு கூட்டம் நடத்தக்கூடாது.

தேர்தலின் போது மதுபாட்டில் விநியோகம் செய்யக்கூடாது. மதுக்கடையில் கட்சி ஆதரவாளர்களுக்கு மது அருந்த டோக்கன் விநியோகம் செய்யக்கூடாது.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், நாங்குநேரி தாசில்தார் ரகுமத்துல்லா மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த அலுவலகத்துக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story