நாங்குநேரிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்: நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கலெக்டர் ஷில்பா பேட்டி


நாங்குநேரிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்: நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கலெக்டர் ஷில்பா பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2019 10:15 PM GMT (Updated: 21 Sep 2019 8:16 PM GMT)

நாங்குநேரி தொகுதிக்கு வருகிற அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. நாங்குநேரி இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 21-ந் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 23-ந் தேதி (நாளை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 30-ந் தேதியாகும். வேட்புமனு மீதான பரிசீலனை 1-ந் தேதி நடக்கிறது. மனுவை திரும்ப பெற கடைசி நாள் 3-ந் தேதியாகும். அக்டோபர் மாதம் 24-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடக்கிறது.

இந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நாங்குநேரி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வேட்பு மனுவை நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும், தாசில்தார் ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த தொகுதியில் உள்ள 1,231 மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 25 பேர் ஆண்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 385 பேர் பெண்கள். 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். தேர்தலுக்கு தேவையான 719 ஓட்டுப்பதிவு எந்திரங்களும், 589 கட்டுப்பாட்டு கருவிகளும், 585 ஓட்டு பதிவை சரிபார்க்கும் எந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தேர்தல் விதி மீறல்கள் குறித்த வீடியோவை ‘ Cv-i-g-il ‘ என்ற இணையதள செயலி மூலம் அனுப்பலாம்.

நாங்குநேரி தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. மாவட்டம் முழுவதும் 10 பறக்கும் படைகளும், 10 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. நாங்குநேரி தொகுதிக்குள் மட்டும் 3 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் சோதனையில் ஈடுபடும்போது பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அம்மா திட்ட முகாம் ஆகியவை நடைபெறாது.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், தாசில்தார்கள் ரகுமத்துலா, தங்கராஜ், திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story