நெல்லைக்கு துரந்தோ ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்


நெல்லைக்கு துரந்தோ ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:00 PM GMT (Updated: 19 Sep 2019 8:10 PM GMT)

நெல்லைக்கு துரந்தோ ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

நெல்லை, 

திருவனந்தபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு, அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். அங்குள்ள மேற்கூரை, பயணிகள் காத்திருப்பு அறைகளை சீரமைக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே ரெயிலை இயக்கி நிறுத்திவிட்டார்கள். இந்த ரெயிலை தொடர்ந்து வாரத்தில் 3 நாட்களுக்கு இயக்க வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு (06008) வெள்ளிக்கிழமை தோறும் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். அந்த ரெயிலை மறுநாள் வேளாங்கண்ணிக்கு இயக்கிவிட்டு, மீண்டும் அதே வழித்தடத்தில் நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும்.

காவல்கிணறு ரெயில் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும். நெல்லை- பாலக்காடு ரெயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரை-புதுடெல்லி சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். பணகுடி ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக இரவில் ரெயில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே துறையால் அமைக்கப்பட்டு வரும் இருவழிப்பாதை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். நாங்குநேரி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே கிராசிங்கில் எந்தவித தடையும் இன்றி விரைந்து பாலம் ஏற்படுத்த வேண்டும். இந்த பாதையில் உள்ள கேட் எண் 100-ஐ எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது.

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரெயில் (16399, 16340) பெட்டிகளை மாற்றி எல்.எச்.பி. ரேக் கொண்ட புதிய ரெயில் பெட்டிகளை அமைக்க வேண்டும். மும்பை-கொச்சுவேலிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். ஹபா-நெல்லை ரெயில் மாலை 5.20 மணிக்கு நெல்லைக்கு வந்து கொண்டு இருந்தது. தற்போது, இந்த ரெயில் இரவு 10.20 மணிக்கு வரும்படி இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை மாலை 5.20 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்படி மாற்றி அமைக்க வேண்டும். நெல்லைக்கு துரந்தோ ரெயில் வசதி எதுவுமில்லை. எனவே நெல்லைக்கு துரந்தோ ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story