மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 15 Sep 2019 8:18 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடிக்கிறது. ஆனாலும் குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய சீசன் காலம் முடிந்த பின்னரும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் மாலை 6 மணியளவில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சிறிது நேரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் உடனடியாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். அப்போது அங்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், மற்ற அருவிகளுக்கு சென்றனர். விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். அனைத்து அருவிகளுக்கும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story