திருட்டுப்போன நடராஜர் சிலை மீட்பு: கல்லிடைக்குறிச்சி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் புதிய கதவு-கண்காணிப்பு கேமரா பொருத்தம்


திருட்டுப்போன நடராஜர் சிலை மீட்பு: கல்லிடைக்குறிச்சி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் புதிய கதவு-கண்காணிப்பு கேமரா பொருத்தம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:00 PM GMT (Updated: 14 Sep 2019 7:37 PM GMT)

திருட்டுப்போன நடராஜர் சிலை மீட்கப்பட்டதையடுத்து கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

அம்பை, 

திருட்டுப்போன நடராஜர் சிலை மீட்கப்பட்டதையடுத்து கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. சிலையை பாதுகாப்பாக வைக்க கோவிலில் புதிய கதவும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.

சிலைகள் திருட்டு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் பழமை வாய்ந்த அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், ஸ்ரீபலிநாதர் ஆகிய சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் திருட்டு போனது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் சிலைகள் திருட்டுப்போன சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால், சிலை கண்டுபிடிப்பது தொடர்பாக எந்தவித முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை.

பொன் மாணிக்கவேல்

இந்தநிலையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிர விசாரணை நடத்தி, இக்கோவிலுக்குரிய நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். அவரது தலைமையிலான குழுவினரின் தொடர் நடவடிக்கை, கடும் போராட்டத்துக்கு பின்பு அந்த சிலையை மீட்டுள்ளனர். சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய தூதரகத்தின் மூலமாக ரெயில் மூலம் சென்னை கொண்டு வந்துள்ளனர்.

கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடராஜர் சிலை ஆஜர் செய்யப்பட உள்ளது. அதற்காக இந்து அறநிலையத்துறையை சார்ந்த நெல்லை மாவட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர் கும்பகோணத்தில் முகாமிட்டுள்ளனர். சிறப்பு கோர்ட்டில் சிலை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவிலில் நிறுவப்பட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இக்கோவிலை ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அறிவுறுத்தினார். அதன்படி தற்போது கோவில் நுழைவாயில், உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய பகுதிகளில் 4 தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும், கூடுதலாக புதிய இரும்பு கதவுகளும், அவசர ஒலி கருவிகளும் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான 17 சாமி விக்ரகங்கள் பாதுகாப்பு கருதி கல்லிடைக்குறிச்சி குமார கோவிலில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை இக்கோவிலுக்கு வந்தடைந்ததும், இக்கோவிலுக்கு சொந்தமான அனைத்து விக்ரகங்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் கோவிலுக்கு இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story